உளவு பார்த்த குற்றச்சாற்றின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்தியர் ராம் பிரகாஷ் என்பவரை பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அவரின் தண்டனை காலம் முடிந்ததை முன்னிட்டு பாகிஸ்தான் அரசு விடுதலை செய்துள்ளது.
ராம் பிரகாஷ், 51, இன்று காலை லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். அவர் தனக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனையை பூர்த்தி செய்ததை முன்னிட்டு அவரை விடுவிக்குமாறு பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் நேற்று உத்தரவிட்டது.
சிறை அதிகாரிகள் ராம் பிரகாஷை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்காக வாகா எல்லைக்கு அழைத்துச் சென்றதாக தொலைக்காட்சிகள் கூறுகின்றன.
கடந்த மே மாதம், மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி பாகிஸ்தான் பயணம் மேற்கொண்டதை முன்னிட்டு, நல்லெண்ண அடிப்படையில் 96 மீனவர்கள் உள்பட 99 இந்தியக் கைதிகளை பாகிஸ்தான் அரசு விடுதலை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.