இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கப் படையினருக்கும் இடையில் 1975 முதல் 2002 வரை நடந்த மோதல்களில் 2,15,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
இந்த எண்ணிக்கை முன்பு வெறும் 61,000 என்று மதிப்பிடப்பட்டு இருந்தது.
"வியட்நாமில் இருந்து போஸ்னியா வரை ஐம்பது ஆண்டு கால போர் வன்முறை உயிரிழப்புகள்: உலகச் சுகாதார ஆய்வுத் தரவின் பகுப்பாய்வு" என்ற தலைப்பிலான ஆய்வு ஒன்று பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் வெளியாகி உள்ளது.
"போர்களினால் பலியானோரின் எண்ணிக்கை முன்பு மதிப்பிடப்பட்டதை விட அதிகமானதாகவே உள்ளது. அண்மை காலம் வரை போர் மரணங்கள் குறைந்துள்ளதற்கான ஆதாரமே இல்லை" என்கிறது இந்த ஆய்வு.
கடந்த 50 ஆண்டுகளில் இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட 13 நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் உயிரிழப்புகள் பற்றி பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது.
போர்களில் பலியானோரின் மிகச் சரியான எண்ணிக்கையை கண்டறிவதை முக்கியக் குறிக்கோளாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின்படி, 1971 ஆம் ஆண்டு வங்கதேச விடுதலைக்காக நடந்த போரில் 2,69,000 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த எண்ணிக்கை முன்பு வெறும் 58,000 மாக மதிப்பிடப்பட்டு இருந்தது.
பல்வேறு சமயங்களில் அரசியல் தலைவர்களாலும், ராணுவ அதிகாரிகளினாலும் போரினால் ஏற்பட்ட இழப்புகள் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளன என்று சுட்டிக் காட்டியுள்ள இந்த ஆய்வு, போரிழப்புகளின் சரியான தகவல்களைத் தெரிந்து கொண்டால் போர்க் குற்றங்களின் கடுமையை உணர முடியும் என்கிறது.