வடமேற்குப் பாகிஸ்தானில் இரண்டாவது நாளாக இன்றும் முஸ்லிம்களின் ஷியா மற்றும் சன்னி குழுக்களிடையே நடந்த கடும் மோதலில் 13 பேர் கொல்லப்பட்டதுடன் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
குராம் ஏஜென்சி என்ற பழங்குடியினர் பகுதியில் வசிக்கும் ஷியா மற்றும் சன்னி குழுவினருக்கு இடையில் நேற்று சாதாரணமாக துவங்கிய மோதல் இன்று தீவிரமடைந்தது. இருதரப்பினரும் மோர்ட்டார், தானியங்கித் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி எதிர்த்தரப்பின் நிலைகளைத் தாககி வருகின்றனர்.
ஷியா துரி மற்றும் சன்னி மெங்கல் ஆகிய பழங்குடியினர் பகுதிகளில் நடந்த மோதல்களில் 13 பேர் கொல்லப்பட்டதுடன், 100 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர் என்று டான் நாளிதழ் தெரிவிக்கிறது.
இம்மோதலால் குர்ரம் ஏஜென்சி பகுதியை பாகிஸ்தானின் மற்ற பகுதிகளுடன் இணைக்கும் முக்கியச் சாலைகளில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. பாதுகாப்புப் படையினர் கூட நுழைய முடியாதபடி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்பகுதியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் நடந்து வரும் மோதல்களில் இதுவரை நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் இன்று காலை குர்ரம் பகுதியில் உள்ள சிறையில் இருந்த 35 கைதிகள் பாதுகாவலர்களைத் தாக்கிவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.
இக்கைதிகளில் 4 பேர் மட்டுமே கொலைக் குற்றவாளிகள் என்றும் மற்றவர்கள் சிறு தவறுகளில் தண்டனை பெற்றவர்கள் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.