அமெரிக்கப் படையினரிடையில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்குத் தற்கொலைகள் அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2007 ஆம் ஆண்டு 115 படையினர் தற்கொலை செய்துகொண்டு உள்ளனர். ஆஃப்கானிஸ்தான், ஈராக் போர்களினால் படையினரிடையில் அதிகரித்துள்ள மன அழுத்தமே இத்தற்கொலைகளுக்கு முக்கியக் காரணமாக இருந்துள்ளது.
மேலும், போரில் ஈடுபடுத்தப்படாத ரிசர்வ் படையினர் மற்றும் தேசியப் பாதுகாப்புப் படையினரில் 53 பேர் தற்கொலை செய்துள்ளனர். இதுதவிர ஒட்டுமொத்தமாக 935 படையினர் தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
2006 ஆம் ஆண்டு ராணுவப் புள்ளி விவரப்படி தற்கொலை செய்து கொண்ட படையினரின் எண்ணிக்கை 102. அப்போதே, வரும் ஆண்டில் தற்கொலைகளின் எண்ணிக்கை 12 விழுக்காடு அதிகரிக்கும் என்று கூறப்பட்டது.
இந்த ஆண்டு (2008) இதுவரை 38 படையினர் தற்கொலை செய்து கொண்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல 2003 இல் 79 பேரும், 2004 இல் 67 பேரும், 2005 இல் 85 பேரும் தற்கொலை செய்துகொண்டு உள்ளனர்.
கடந்த 1980 முதல் அமெரிக்கப் பாதுகாப்புத் துறை, தற்கொலை செய்து கொள்ளும் படையினரின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு வருகிறது. போரினால் ஏற்படும் மன அழுத்தம்தான் தற்கொலைகளுக்கு முதல் காரணமாகக் கண்டறியப்பட்டுள்ளது.
தற்கொலை செய்து கொள்ளும் படையினரில் 25 விழுக்காட்டினர் முதல்முறை போருக்குப் போகும்போதும், 43 விழுக்காட்டினர் போர் முடிந்து வீட்டிற்குத் திரும்பிய பிறகும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
7 விழுக்காடு படையினர் மட்டுமே ஒன்றுக்கும் மேற்பட்ட முறை போருக்குச் சென்று வந்த பிறகு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 26 விழுக்காட்டினர் போருக்கே போகாத நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இதிலிருந்து போருக்குச் செல்லும் எண்ணிக்கைக்கும் தற்கொலைக்கும் தொடர்பில்லை என்பது தெரிகிறது.
அமெரிக்க ராணுவத்தில் மொத்தம் 1.08 மில்லியன் படையினர் உள்ளனர். இதில் 525,000 படையினர் பணியிலும், 194,000 படையினர் ரிசர்வ் பிரிவிலும், தேசியப் பாதுகாப்புப் படையிலும் உள்ளனர்.