யாழ்ப்பாணம் மண்டைத்தீவுக்கு அருகில் உள்ள சிறுத்தீவு சிறிலங்க கடற்படைத்தளத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்புக் கமாண்டோ அணியினர் தாக்கி அழித்துள்ளனர்.
இதில் 13 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். ராடார், 50 காலிபர் துப்பாக்கி, வெடி பொருட்கள் உள்ளிட்ட ஆயுதங்களை விடுதலைப் புலிகள் கைப்பற்றியுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிறுத்தீவு சிறிலங்கக் கடற்படைத்தளம் மீது இன்று அதிகாலை 1.25 மணிக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் பிரிவைச் சேர்ந்த சிறப்பு கமாண்டோக்கள் அதிரடித் தாக்குதல் நடத்தியதாக புதினம் இணைய தளம் தெரிவிக்கிறது.
அதிகாலை 2 மணி வரை நீடித்த இத்தாக்குதலில் 13 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன், பலர் படுகாயமடைந்துள்ளனர். கொல்லப்பட்ட 3 கடற்படையினரின் உடல்களையும், 50 காலிபர் துப்பாக்கி, ராடார், வெடி பொருட்கள் உள்ளிட்ட ஆயுதங்களையும் விடுதலைப் புலிகள் கைப்பற்றியுள்ளனர்.
மண்டைத்தீவிற்கும் யாழ்ப்பாணம் நகருக்கும் இடையில் அமைந்துள்ள சிறுத்தீவு கடற்படைத்தளம் சிறிலங்கக் கடற்படையினரின் முக்கியத் தாக்குதல் தளங்களில் ஒன்றாகும்.
யாழ்ப்பாணம் பகுதி கடற்பாதுகாப்பை சிறுத்தீவு கடற்படைத் தளமும், மண்டைத்தீவில் உள்ள வேலுசுமண கடற்படைத் தளமும்தான் உறுதிப்படுத்தி வந்தன. இதனால் இப்பகுதியில் ராடார்கள், அதிவேகப் படகுகள் உள்ளிட்ட கண்காணிப்பு ஏற்பாடுகள் வலுவாகச் செய்யப்பட்டுள்ளன.
இத்தனை பாதுகாப்பிற்கு இடையில் கடற்புலிகளின் பட்குகளில் சென்றுள்ள சிறப்புக் கமாண்டோ அணியினர், சிறுத்தீவில் உள்ள சிறிலங்கக் கடற்படையினரைத் தாக்கி தளத்தை சுமார் 35 நிமிடத்திற்குள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
சிறுத்தீவு தளத்தில் இருந்த ஏராளமான ஆயுதங்களையும், அவர்கள் கைப்பற்றியுள்ளனர்.
முன்னதாக கடந்த ஆண்டு மே மாதம் நெடுந்தீவில் உள்ள சிறிலங்கப் படையினரின் குயின்ராக் தளத்தின் மீது தாக்குதல் நடத்திய கடற்புலிகள், ராடார்கள், 50 காலிபர் துப்பாக்கி, வெடிபொருட்கள் உள்ளிட்ட ஆயுதங்களைக் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.