ஈரான் தனது அணு ஆராய்ச்சிகள் பற்றிய முழுமையான தகவல்களை வெளியிடவில்லை என்று சர்வதேச அணுசக்தி முகமை தெரிவித்துள்ளது.
ஈரான் ரகசியமாக அணு ஆயுதங்களைத் தயாரிப்பதாக குற்றச்சாற்று உள்ள நிலையில், இதுபோன்ற நடவடிக்கைகளில் அந்நாடு ஈடுபடுவது மிகவும் கவலை அளிக்கக் கூடியது என்றும் அணுசக்தி முகமை கூறியுள்ளது.
ஈரானின் அணுத் திட்டங்கள் குறித்து சர்வதேச அணுசக்தி முகமையின் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஈரான் தனது அணு ஆராய்ச்சித் திட்டங்கள் பற்றிய முழுமையான தகவல்களை சர்வதேச அணுசக்தி முகமையுடன் பகிர்ந்து கொள்ளவில்லை. குறிப்பாக அணு ஆயுதங்களுக்குத் தேவையான கருவிகளையும், கதிர்வீச்சுத் தனிமங்களையும் ஈரான் உருவாக்கி வருவதாக எங்களுக்குச் சந்தேகம் உள்ளது.
யுரேனியம் செறிவூட்டலை நிறுத்துமாறு ஐ.நா. கூறியதை ஈரான் கேட்கவில்லை. இது தொடர்ந்தால் அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் விடுத்துள்ள வேண்டுகோளின்படி ஈரானின் மீது கடுமையான தடைகளை விதிக்க வேண்டிய சூழல் ஏற்படும்.
இதைத் தவிர்க்க ஈரான் தன்னிடம் உள்ள அணு ஆராய்ச்சித் திட்டங்கள் பற்றிய முழுமையான தகவல்களை சர்வதேச அணுசக்தி முகமையுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் சிலவற்றின் உளவு அமைப்புகளின் தகவல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கை விரைவில் ஐ.நா. பாதுகாப்பு அவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.