சிறிலங்காவில் நடக்கவுள்ள தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பு (சார்க்) மாநாட்டிற்குத் தேவையான எல்லா பாதுகாப்பு ஏற்பாடுகளும் முழுமையாக மேற்கொள்ளப்படும் என்று அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சார்க் கூட்டமைப்பின் 8ஆவது மாநாடு சிறிலங்காவில் வருகிற ஜூலை 27 அன்று தொடங்கவுள்ளது.
இதில் விவாதிக்கப்பட உள்ள விடயங்கள் பற்றி விளக்குவதற்காக கொழும்பில் தன்னைச் சந்தித்த சார்க் கூட்டமைப்பின் பொதுச் செயலர் ஷீல் கந்த சர்மாவிடம் அதிபர் மகிந்த ராஜபக்ச இவ்வாறு உறுதியளித்துள்ளார்.
"சார்க் மாநாடு முடியும்வரை முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும் என்று சார்க் கூட்டமைப்பின் பொதுச் செயலரிடம் அதிபர் மகிந்த ராஜபக்ச உறுதியளித்தார்" என்று சிறிலங்க அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சார்க் மாநாட்டில் பங்கேற்கவுள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் கடுமையான பாதுகாப்பு வழங்கப்படும் என்று அந்த அதிகாரி கூறினார்.
முன்னதாக சிறிலங்க அரசிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான 2002 போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து சிறிலங்க அரசு ஒருதலை பட்சமாக விலகியதைத் தொடர்ந்து பதற்றம் அதிகரித்துள்ளது.
கொழும்பில் நேற்று ரயிலில் நடந்த குண்டுவெடிப்பில் 9 பேர் கொல்லப்பட்டதுடன் 70க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.