சோமாலியக் கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட ஜோர்டான் நாட்டுக் கப்பலில் இருந்த இந்தியர்கள் 10 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இம்மாத துவக்கத்தில் மும்பையில் இருந்து சோமாலிய தலைநகர் மொகதிசுவிற்கு 4,200 டன் சர்க்கரையை ஏற்றிக்கொண்டு சென்ற ஜோர்டானியக் கப்பல் எம்.வி.விக்டோரியாவை, கடந்த 17 ஆம் தேதி பயங்கர ஆயுதங்களுடன் வந்த கடல் கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர்.
அக்கப்பலில் இந்தியர்கள் 10 பேர் உள்ளிட்ட 21 ஊழியர்கள் இருந்தனர். அவர்களை விடுவிக்கும் முகமாக கொள்ளையர்களுடன் நடத்திய பேச்சு வெற்றிபெற்றுள்ளது.
இதுகுறித்து கப்பல் போக்குவரத்துக் கழக தலைமையகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், எம்.வி.விக்டோரியா கப்பலில் இருந்த இந்தியர்கள் 10 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.