சிறைக்கைதிகள் விடுதலை தொடர்பாக இருநாடுகளும் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய மீனவர்கள் 96 பேரை பாகிஸ்தான் விடுதலை செய்துள்ளது.
கராச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்து இன்று விடுதலை செய்யப்பட்டுள்ள இந்த மீனவர்கள் அனைவரும் நாளை லாகூரில் உள்ள வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவர் என்று பாகிஸ்தான் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி 3 இந்தியர்களும் விரைவில் விடுதலை செய்யப்பட்டு நாளை இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவர் என்றும் அவர்கள் கூறினர்.
இந்திய மீனவர்கள் 96 பேரும் பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததற்காகக் கைது செய்யப்பட்டவர்கள் ஆவர். இதேபோல இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த பாகிஸ்தான் மீனவர்களும் இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருநாட்டுக் கடல் எல்லையையும் பிரித்துக் காட்டுமாறு தெளிவான எல்லைக்கோடு எதுவும் கடலில் இல்லை என்பதால், இதுபோன்ற அத்துமீறல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரிப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
பாகிஸ்தானில் அமைந்துள்ள புதிய அரசுடன் அமைதிப் பேச்சை மீண்டும் துவங்குவதற்காக இந்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கடந்த மே 19- 20 தேதிகளில் இஸ்லாமாபாத் சென்றிருந்த போது, இந்திய மீனவர்கள் 96 பேர் உட்பட இந்தியர்கள் 99 பேர் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் அறிவித்தது.