சோமாலியா கடற்கரை அருகில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட ஜோர்டான் நாட்டுச் சரக்குக் கப்பலில் உள்ள 10 இந்தியர்கள் உள்ளிட்ட ஊழியர்களை விடுவிக்கப் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது.
எம்.வி. விக்டோரியா என்ற அந்தக் கப்பல், கடத்தப்பட்டபோது மும்பையில் இருந்து மொகதிசுவிற்கு 4,200 டன் சர்க்கரையை ஏற்றிச்சென்று கொண்டிருந்தது.
"எம்.வி. விக்டோரியா கப்பலில் உள்ள சரக்குகளை கடத்தல்காரர்கள் இறக்கிவிட்டனர். தற்போது 10 இந்தியர்கள் உள்ளிட்ட ஊழியர்களைப் பத்திரமாக மீட்பதற்கான பேச்சு நடந்து வருகிறது" என்று இந்தியக் கப்பல் போக்குரத்துக் கழக உயரதிகாரி ஒருவர் கூறியதாக பி.டி.ஐ. செய்தி தெரிவிக்கிறது.
இருந்தாலும், கடத்தப்பட்ட கப்பல் இந்தியாவில் பதிவு செய்யப்படவில்லை என்பதால், இந்தியா பேச்சில் பங்கேற்கவில்லை.
இதுகுறித்துக் கேட்டதற்கு, "நாங்கள் பேச்சில் பங்கேற்கவில்லை. இதுபோன்ற பேச்சுக்கள் மூன்றாம் நபர்களைக் கொண்டு முடிக்கப்படுவதுதான் வழக்கம்" என்றார் அந்த அதிகாரி.
ஜோர்டானைச் சேர்ந்த எம்.வி.விக்டோரியா சரக்குக் கப்பல் கடந்த 17 ஆம் தேதி மொகதிசு அருகில் பயங்கர ஆயுதங்களை ஏந்திய சோமாலியக் கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்டது.
இந்தக் கப்பலில் 21 பேர் இருந்தனர். இதில் 10 பேர் இந்தியர்கள்; மற்றவர்கள் பாகிஸ்தான், பர்மா, வங்காளதேசம், கென்யா, தான்சானியா நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்தக் கப்பல் ஃபைவ் சீஸ் நிறுவனத்திற்குச் சொந்தமானது. இதை மர்வான் ஷிப்பிங் நிறுவனம் இயக்கி வந்தது. இந்த இரண்டு நிறுவனங்களும் ஷார்ஜாவைச் சேர்ந்தவை.