ஐ.நா. மனித உரிமைகள் அவையில் பிரதிநிதித்துவம் பெறுவதற்கான வாக்கெடுப்பில், சில வாக்குகள் வித்தியாசத்தில் தனது பிரதிநிதித்துவத்தை சிறிலங்கா இழந்தது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று ஐ.நா. மனித உரிமைகள் அவையில் இடம் பெறுவதற்கான வாக்கெடுப்பு நடந்தது.
தெற்காசிய நாடுகளுக்கான 4 பிரதிநிதிகள் பதவிகளுக்கு சிறிலங்கா, கிழக்கு தைமூர், ஜப்பான், தென்கொரியா, பாகிஸ்தான், பஹ்ரெய்ன் ஆகிய ஆறு நாடுகள் போட்டியிட்டன.
இதில் ஜப்பான் 155, பஹ்ரெய்ன் 142, தென்கொரியா 139, பாகிஸ்தான் 114, சிறிலங்கா 101, கிழக்கு தைமூர் 92 என்றவாறு வாக்குகளைப் பெற்றன.
சிறிலங்காவும் கிழக்குத் தைமூரூம் தோல்வியைத் தழுவின. இவற்றை விடச் சற்று அதிக வாக்குகளைப் பெற்றுள்ள மற்ற நான்கு நாடுகளும் மனித உரிமைகள் அவைக்குத் தேர்வாகின.
மனித உரிமைகள் அவையில் மீண்டும் இடம்பெறுவதற்குக் கடுமையாக முயற்சித்த சிறிலங்காவிற்கு இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் ஆதரவளித்தன. இருந்தாலும் சிறிலங்கா தோல்வியடைந்துள்ளது.
சிறிலங்கா, பாகிஸ்தான், ஜப்பான், தென்கொரியா, கிழக்கு தைமூர், பஹ்ரெய்ன் ஆகியவற்றில் பஹ்ரெய்னும் கிழக்கு தைமூரும் முதல் தடவையாக மனித உரிமைகள் அவைக்கான தேர்தலில் போட்டியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, நோபல் பரிசு பெற்ற அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜிம்மி காட்டர், தென்னாப்பிரிக்க பேராயர் டெஸ்மண்ட் டுட்டு, அர்ஜென்டினாவைச் சேர்ந்த அடால்ஃப் ஃபெரேஸ் எஸ்குவல் ஆகியோர், ஐ.நா. மனித உரிமைகள் அவையில் இருந்து சிறிலங்காவை நீக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
ஐ.நாவின் மனித உரிமைகள் அவை 2006 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் தேதி ஜெனிவாவில் நிறுவப்பட்டது.
47 நிரந்தர பிரதிநிதிகளைக் கொண்ட அவையில், 13 உறுப்புப் பிரதிநிதி பதவிகள் ஆசிய நாடுகளுக்கு வழங்கப்படும்.
ஐ.நாவில் அங்கம் வகிக்கும் 192 நாடுகள், உலகளாவிய அளவில் மேற்கொள்ளும் ஆய்வின் அடிப்படையில் மனித உரிமைகள் அவைக்கான பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படுவதும் உண்டு.