உலகின் உணவு பொருட்கள் விலை உயர்விற்கு ஏற்றுமதி நாடுகள் விதித்துள்ள தடைகளே காரணம் இயற்கை எரிபொருள் உற்பத்தி அல்ல என்று அமெரிக்க மற்றும் பிரேசில் வேளாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியா, வியட்னாம் மற்றும் அர்ஜென்டீனா ஆகிய நாடுகள் அரிசி, கோதுமை மற்றும் சோயா ஆகிய உணவுப் பொருட்களின் முக்கிய ஏற்றுமதி நாடுகள். இந்த நாடுகள் ஏற்றுமதிகளுக்கு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகளால் விலை உயர்ந்து பணவீக்கம் அதிகரித்துள்ளதாக அமெரிக்காவும் பிரேசிலும் கூறியுள்ளன.
அமெரிக்கவின் பண்ணை மற்றும் அயல் நாட்டு வேளாண் சேவைத் துறைத் தலைவர் மார்க் கீனம் இது குறித்து கூறுகையில் இந்தியாவும் வியட்னாமும் அரிசி ஏற்றுமதிக்கு கெடுபிடிகள் விதித்துள்ளன. அர்ஜென்டீனாவோ கோதுமை மற்றும் மாட்டிறைச்சி ஏற்றுமதியை தடையே செய்துவிட்டது மேலும் சோயா மீது கடுமையான ஏற்றுமதியை வரியை விதித்துள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளார்.
ஆனால் பிரேசிலின் சர்வதேச வேளாண் வர்த்தக செயலர் சீலியோ போர்டோ கூறுகையில் வளர்ந்த நாடுகள் வேளாண் உற்பத்திக்கு கொடுத்து வரும் மானியத்தை நிறுத்க்தவேண்டும் என்றும் இதனால் மட்டுமே வளரும் நாடுகள் மிகப்பெரிய சந்தைகளுக்கு தங்கள் வேளாண் உற்பத்திகளை கொண்டு வர முடியும் என்றும் கூறியுள்ளார்.