வடமேற்குப் பாகிஸ்தானில் மார்டன் நகரத்தில் மக்கள் நெருக்கடி மிகுந்த சந்தைப் பகுதியில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டதுடன், 22 பேர் படுகாயமடைந்தனர்.
விடுமுறை நாளான நேற்று மாலை 7.30 மணியளவில் ஏராளமான பொதுமக்கள் சந்தையில் கூடியிருந்தபோது இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் தற்கொலைத் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டதுடன் 22 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்ததாக வடமேற்கு மாகாண தகவல் அமைச்சர் மியான் இஃப்திகார் ஹூசைன் தெரிவித்தார். பலியானவர்களின் 4 பேர் ராணுவத்தினர் என்று ராணுவப் பேச்சளார் தெரிவித்தார்.
பேக்கரி ஒன்றின் அருகில் நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவரை பாதுகாப்புப் படையினர் சந்தேகத்தின் பேரில் சோதனையிட முயன்றபோது, அந்த இளைஞர் தன்னிடம் இருந்த வெகுண்டை வெடிக்கச் செய்துள்ளார்.
சிதறிக்கிடந்த அந்த இளைஞரின் உடல் பாகங்களை வைத்துப் பார்க்கும் போது, அவருக்கு வயது 20 இருக்கலாம் என்று தெரிய வருகிறது என்று பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.