இலங்கைத் தலைநகர் கொழும்புவில் காவலர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 9 காவல் துறையினர் பலியானார்கள். 90 பேர் படுகாயம் அடைந்தனர்.
கொழும்பு லேக்ஹவுஸ் அருகே வான்படையினரின் சோதனை நிலையம் அமைந்துள்ள பகுதியில் இன்று பிற்பகல் 12.05 மணிக்கு இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
காவல் துறையினரை ஏற்றிச்சென்ற வாகனம் ஒன்றின் மீது முச்சக்கர வாகனம் மோதியதனை அடுத்தே இந்த குண்டுவெடிப்பு நடந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்த 90 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயர் பாதுகாப்பு பகுதியில் தாக்குதல் நடந்துள்ளதால், அந்த இடத்தில் பதற்றநிலை காணப்படுவதாகவும் அப்பகுதியில் படையினரும் வான்படையினரும் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த குண்டுவெடிப்பு குறித்து ராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார கூறுகையில், புறக்கோட்டை சம்போதி விகாரையை அண்மித்துள்ள பகுதியில் பிற்பகல் 12 மணிக்கு இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சேத விபரங்கள் உடன் தெரியவரவில்லை என்றார்.