ஜெய்ப்பூர் தொடர் குண்டுவெடிப்பிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா, அப்பாவி மக்கள் படுகொலைகளை மன்னிக்க முடியாது என்று கூறியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க அயலுறவுப் பேச்சாளர் சான் மெக்கார்மக் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அப்பாவி மக்கள் பலர் பலியானதற்கும், படுகாயம் அடைந்ததற்கும் காரணமான ஜெய்ப்பூர் பயங்கரவாதத் தாக்குதல்களை அமெரிக்கா கண்டிக்கிறது.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களும் அவர்களின் குடும்பத்தாருக்கும் எங்களுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அப்பாவி மக்கள் படுகொலைகளுக்கு மன்னிப்பு இல்லை. பயங்கரவாதத்தை வேருடன் ஒழிப்பதற்காகப் போராடும் இந்திய அரசுடனும் மக்களுடனும் நாங்கள் என்றும் இணைந்து நிற்போம். ஜனநாயகமான, அமைதியான, சகோதரத்துவம் மிக்க சமுதாயத்தை உருவாக்குவோம்.
இவ்வாறு சான் மெக்கார்மக் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.