உலகளவில் அதிகரிக்கும் உணவு விலை உயர்வு, ராணுவ உடன்படிக்கைகள், பாதுகாப்பை மேம்படுத்தும் வழிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து, அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான இந்திய உயர்மட்டக் குழுவினர் ஐக்கிய அரபு குடியரசுடன் விவாதித்தனர்.
திங்கட்கிழமை மாலை ஐக்கிய அரபு குடியரசின் அயலுறவு அமைச்சர் ஷேக் அப்துல்லா பின்-ஐச் சந்தித்த அமைச்சர் பிரணாப் முகர்ஜி, சர்வேதேச விவகாரங்களுடன் ராணுவப் பாதுகாப்பு உடன்படிக்கைகளை மேம்படுத்தும் வழிமுறைகள் குறித்தும் விவாதித்தார்.
ஐக்கிய அரபு குடியரசு- இந்திய கூட்டுக்குழுவின் முன்னேற்றம், லெபனான் விவகாரம், மத்திய- கிழக்கு அமைதி நடவடிக்கைகள், ஈராக் விவகாரம், சர்வதேச அணுசக்தி முகமையுடனான ஈரானின் அணுத் திட்டம் உள்ளிட்ட விடயங்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சந்திப்பில் ஐக்கிய அரபு குடியரசு அயலுறவு அமைச்சர் அலுவலகத்தின் இயக்குநர் ரஷீத் ஹெராஃப், இந்தியத் தூதர் தல்மீஸ் அகமது ஆகியோரும் பங்கேற்றனர்.