சீனாவில் 7.8 ரிக்டர் அளவிற்கு ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்திற்கு 107 பலியாகியுள்ளனர். பள்ளிக் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி 900 மாணவர்கள் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
தென்கிழக்கு ஆசியாவையும், சீனாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள பல்வேறு நகரங்களையும் உலுக்கியுள்ள இந்த நிலநடுக்கத்தில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
சீனாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் இன்று காலை 11.58 மணியளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 7.8 ஆகப் பதிவானது.
அம்மாகாணத்தின் தலைநகரான செங்டுவில் இருந்து 57 மைல் தொலைவில் மையம் கொண்டிருந்த இந்த நிலடுக்கத்தினால் உண்டான அதிர்வுகள், சீனத் தலைநகர் பீஜிங், ஷாங்காய், தாய்லாந்து தலைநகர் பாங்காங், வியட்நாமில் உள்ள ஹனாய் நகரங்களிலும் உணரப்பட்டன.
நிலநடுக்கத்தை தொடர்ந்து ஏற்பட்ட அதிர்வு கிழக்கு பீஜிங்கில் 3.9 ரிக்டராகப் பதிவானது. இதனால் பீதியடைந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சாலைகளுக்கு ஓடி வந்தனர்.
லியாங்பிங் பகுதியில் 2 தொடக்கப் பள்ளிகளின் கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இதில் இடிபாடுகளில் சிக்கி 4 குழந்தைகள் பலியானதுடன், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
பள்ளிகளின் வகுப்பறைகளில் அமர்ந்திருந்த சுமார் 900 குழந்தைகள் கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகவும், அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாகவும் சீன அரசின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிச்சுவான் மகாணத்தில் குடிநீர்த் தொட்டி இடிந்து விழுந்ததில் ஒருவர் கொல்லப்பட்டார். யுன்னான் மாகாணத்திலும் கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கி 107 பேர் மேற்பட்டோர் பலியாகினர்.
நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில் உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிபர் ஹூ ஜிந்தாவோ உத்தரவிட்டுள்ளார். சிச்சுவான் மகாணத்திற்கு பிரதமர் வென் ஜியாபாவோ விரைந்துள்ளார்.