மலேசியாவில் உள்ள தமிழ்ப் பள்ளிகள் சந்திக்கும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக குழு ஒன்றை அந்நாட்டு அரசு அமைத்துள்ளது.
மலேசியா செய்ன்ஸ் பழ்கலைக் கழகத்தின் விரிவுரையாளர் முனைவர் கே.அன்பழகன் தலைமையிலான இக்குழு, குறிப்பிட்ட 29 பள்ளிகளின் பிரச்சனைகள் குறித்து விரிவாக விசாரணை நடத்தி அடுத்த மூன்று மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும் என்று மாநிலக் கல்விக் குழுத் தலைவர் முனைவர் பி.ராமசாமி தெரிவித்தார்.
புறக்கணிக்கப்பட்ட பள்ளிகளுக்கு உதவுவது பற்றியும் இத்துணைக் குழு ஆராயும் என்று ராமசாமி கூறினார்.
தமிழ்ப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகமாக உள்ளதென்று குறிப்பிட்ட அவர், கிராமப் புறங்களில் இருந்த ஏராளமான இந்தியக் குடும்பங்கள் நகரங்களுக்கு இடம்பெயர்ந்து விட்டதால் நகரப் புறங்களில் கூடுதலாகத் தமிழ்ப் பள்ளிகளை அமைக்க வேண்டியது அவசியம் என்றார்.
"ஒரு காலத்தில் மலேசியாவில் 1,500 தமிழ்ப் பள்ளிகள் இருந்தன. இந்த எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து, தற்போது 523 பள்ளிகள் மட்டுமே உள்ளன.
தமிழ்ப் பள்ளிகளுக்கு அளிக்கப்படும் அங்கீகாரத்திலும் மாற்றம் வேண்டும். பகுதி உதவி பெறும் பள்ளிகள் யாவும் முழு உதவி பெறும் பள்ளிகளாக மாற்றப்பட வேண்டும் என்றார் அவர்.