சர்வதேசப் பயங்கரவாத இயக்கம் அல் கய்டாவின் தலைவன் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில்தான் பதுங்கியிருக்க வேண்டும் என்று அமெரிக்கப் பத்திரிகையாளர் ஒருவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் காவலர்கள் கூட நுழைவதற்குப் பயப்படும் பழங்குடியினர் பகுதியான வசிரிஸ்தான் மாகாணத்தில் ஒசாமா தங்கியிருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் என்றும் அவர் கூறியுள்ளார்.
பின்லேடனின் குடும்பத்தைப் பற்றிய புத்தகத்தை அண்மையில் எழுதிய அமெரிக்கப் பத்திரிகையாளர் ஸ்டீவ் கால், பாகிஸ்தான் மண்ணில்தான் பின்லேடன் இருப்பதாகத் தான் உறுதியாக நம்புவதாகக் கூறியுள்ளார்.
"மிராம் ஷா நகரத்திற்கு அருகில் உள்ள வடக்கு வசிரிஸ்தான் மாகாணத்தின் மலைப் பகுதிகளில் ஒசாமா தங்கியிருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.... அப்பகுதியில் நுழைவதற்கு பாகிஸ்தான் காவலர்கள், ஏன் ராணுவமே நுழைவதற்குப் பயப்படும்" என்று அவர் ஜெர்மன் நாளிதழ் ஒன்றிடம் கூறியதாக டெய்லி டைம்ஸ் இதழ் செய்தி கூறுகிறது.
நண்பர்களால் பாதுகாக்கப்பட்டுள்ள பின்லேடன் அடிக்கடி இடம் மாறக்கூடியவன் என்று குறிப்பிட்டுள்ள கால், இந்த நேரத்தில் யாராவது ஒருவர் அவனுக்கு துரோகம் செய்யக்கூடும் என்றும் எச்சரித்துள்ளார்.
ஒசாமா பாகிஸ்தானில் ஒளிந்திருப்பதாக அமெரிக்கர் ஒருவர் தெரிவிப்பது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு, பாகிஸ்தானின் பழங்குடியினர் பகுதிகளில் ஒசாமா மறைந்திருப்பதற்குத் தேவையான ஆதாரங்கள் உள்ளதாக அமெரிக்க உளவுத் துறை உயரதிகாரிகள் கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது.