விடுதலைப் புலிகளுடன் 2007 ஆண்டு நடந்த சண்டைகளில் மட்டும் சிறிலங்க ராணுவத்தைச் சேர்ந்த 2,000 படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 4,000 படையினர் காயமடைந்துள்ளதாகவும் சிறிலங்க ராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகா, ராணுவத் தலைமையகத்தில் கடந்த வாரம் நடந்த மாநாட்டில் தெரிவித்ததாக சண்டே டைம்ஸ் இதழ் தெரிவிக்கிறது.
ராணுவ அதிகாரிகள் ஊடகங்களுக்குப் பேட்டியளிப்பதற்குத் தடை விதித்துள்ள சிறிலங்க அரசு, ஊடகங்களுக்கு விவரங்களை அளிக்கும் அதிகாரிகளைத் தேடும் நடவடிக்கையைத் துவங்கியுள்ளதாகவும், ரட்மலான விமான நிலையத்தில் இருந்து கொழும்பு மருத்துவமனைக்கு காயமடைந்த படையினரைக் கொண்டுவரும் மருத்துவ ஊர்திகள் சைரன்களைப் பயன்படுத்தக் கூடாது என்று அரசு அறிவுத்தியுள்ளதாகவும் அவ்விதழ் கூறுகிறது.
ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும் ஒருமுறை ராணுவத் தலைமையகத்தில் நடக்கும் மாநாட்டில் முதன்மை ராணுவ அதிகாரிகள், இயக்குநர்கள் மத்தியில் ராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகா உரையாற்றினார்.
90 நிமிடங்கள் நீடித்த இம்மாநாட்டில், போர்க்களப் பின்னடைவுகள் பற்றிய தகவல்களை ஊடகங்களுக்குக் கசியவிடும் ராணுவ அதிகாரிகளின் மீது அரசுக்கு உள்ள கோபம் பற்றிப் பேசுகையில், "நாங்கள் இந்த விவரங்களை (2007 ஆம் ஆண்டு சேதங்கள்) ஊடகங்களுக்குக் கொடுக்கவில்லை. இங்குள்ளவர்களில் யாராவது தர விரும்பினால் தாரளமாகத் தரலாம்" என்றார் அவர்.
ராணுவத்தினரின் வெற்றிகளை ஊதிப் பெரிதாக்குகிறார் என்று ஊடகங்களால் குற்றம்சாற்றப்பட்டுள்ள ராவணுத் தளபதி சரத் ஃபொன்சேகா, ஊழலை ஒழிப்பது பற்றியும், ஒழுக்கத்தின் தேவை பற்றியும் விரிவாகப் பேசியுள்ளார் என்று சண்டே டைம்ஸ் கூறுகிறது.
கடந்த மாதம் யாழ்ப்பாணத்தில் நடந்த மோதலில் சிறிலங்கப் படையினருக்கு ஏற்பட்ட இழப்புகளைப் பல்வேறு தகவல்கள் வெளியாகின.
இத்தாக்குதலில் 47 படையினர் கொல்லப்பட்டதுடன், 126 படையினர் காயமடைந்ததாக சரத் ஃபொன்சேகா கூறிய அதே நேரத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டதுடன் 355 படையினர் படுகாயமடைந்ததாக சண்டே டைம்ஸ் கூறியது.
இத்தகவல், கொழும்பில் உள்ள படைத்தரப்பு அதிகாரிகள், வடக்கில் போர்முனையில் உள்ள படைத்தரப்பு அதிகாரிகள் ஆகிய இருதரப்பிலும் பெறப்பட்டு சுதந்திரமான நம்பத்தகுந்த வட்டாரங்களில் உறுதி செய்யப்பட்டது என்று சண்டே டைம்ஸ் கூறியது.
மற்ற ஊடகச் செய்திகளும், சிறிலங்கப் படைத்தரப்பு அதிகாரிகளை மேற்கோள்காட்டி, பலி எண்ணிக்கையை மிகவும் அதிகமாகத் தெரிவித்தன. சர்வதேச ஊடகமான ஏ.எஃப்.பி., படைத்தரப்பினரை மேற்கோள் காட்டி 160 படையினர் கொல்லப்பட்டதாகவும் 20க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை என்றும் கூறியது.
தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பில், கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி நாள் முழுவதும் நடந்த மோதல்களில் 100க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டதாகவும், 28 படையினரின் உடல்களைக் கைப்பற்றித் திருப்பி வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, தமிழீழ விடுதலைப் புலிகள் தாங்கள் கைப்பற்றிய சிறிலங்கப் படையினரின் உடல்களை சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்த நிலையில், கொழும்பைச் சுற்றியுள்ள 3 மயானங்களுக்கு 143 படையினரின் உடல்கள் கொண்டுவரப்பட்டதாக சிறிலங்க ஊடகங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து ராணுவத் தலைமையக்தில் நடந்த மாநாட்டில் பேசிய சரத் ஃபொன்சேகா, யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட இழப்புகள் தனது தவறினால் ஏற்பட்டதல்ல என்றதுடன், விடுதலைப் புலிகளுக்கு வெடிபொருட்களையும் ஆயுதங்களையும் கொடுத்த மக்கள்தான் காரணம் என்று குற்றம்சாற்றினார்.
இதற்கிடையில், தி சண்டே டைம்ஸ் இதழின் பாதுகாப்பு பகுதி தலையங்க ஆசிரியர் இக்பால் அதாஸ் இந்த வாரம், வானொலி நிகழ்ச்சிகளில் பாதுகாப்புப் படையினர் பங்கேற்பதற்குத் தடை விதிக்கும் உத்தரவுகள் இந்த வாரம் சிறிலங்க ராணுவத் தலைமையகத்திற்கு அரசிடமிருந்து சென்றுள்ளதாகக் கூறியுள்ளார்.
"மக்கள் உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று பெருமளவிலான ராணுவ அதிகாரிகளும் படையினரும் விரும்புகின்றனர். தேசநலனின் பேரில் அவர்கள், உண்மையை வெளியிடாமல் தங்களை துப்பாக்கி முனையில் நிறுத்திக் கொண்டுள்ளனர்" என்கிறார் அதாஸ்.
மேலும், "கொழும்பில் உள்ள மருத்துவமனைகளுக்கு ரட்மலன விமான நிலையத்தில் இருந்து காயமடைந்த படையினரை எடுத்துச் செல்லும் மருத்துவ ஊர்திகள், சைரன்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு முகாமலை படைத்தரப்பினருக்க உத்தரவுகள் சென்றுள்ளன" என்றும் அவர் தெரிவிக்கிறார்.
"சைரன்கள் ஒழித்தால், போர்க்களத்தில் என்னவோ மோசமாக நடக்கிறது என்று மருத்து ஊர்திகள் செல்லும் வழியில் உள்ள பொதுமக்கள் தெரிந்துகொள்வார்கள் என்பதன் காரணமாகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்கிறார் அவர்.