வங்கக் கடலில் உருவான 'நர்கீஸ்' புயல் மியான்மர் நாட்டைத் தாக்கியதில் 7,000 பேர் பலியாகி இருக்கலாம் என்று அந்நாட்டு அரசு வானொலி தெரிவித்துள்ளது.
மியான்மர் நாட்டை 'நர்கீஸ்' புயல் தாக்கியபோது தலைநகர் யங்கூன், இர்ரவட்டி பாசனப் பகுதிகளில் மணிக்கு 190 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது.
இப்புயலுக்கு சுமார் 4,000 பேர் பலியாகி விட்டதாகவும், ஒரே நகரத்தைச் சேர்ந்த 3,000 பேரைக் காணவில்லை எனவும் மியான்மர் அரசு வானொலி தெரிவிக்கிறது.
யாங்கூன், லபுட்டா, கியாய்க் லட் ஆகிய நகரங்களில் உள்ள 75 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட கட்டடங்கள் முழுமையாக இடிந்து தரைமட்டமாகிவிட்டன. இப்பகுதிகளில் மீட்புப் பணிகள் துரிதகதியில் நடந்து வருகின்றன. இதுவரை 3,939 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
மிகவும் தாழ்வான பகுதியான இர்ரவட்டி பாசனப் பகுதியில் உள்ள பெரும்பாலான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகி விட்டன. எங்கு பார்த்தாலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மீட்புப் பணிகளில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இங்குள்ள போகலே நகரைச் சேர்ந்த 2,879 பேரை ஒட்டுமொத்தமாகக் காணவில்லை என்று வானொலிச் செய்தி தெரிவிக்கிறது.
இந்தப் புயலால் லட்சக்கணக்கான மக்கள் வீடில்லாமல், குடிக்கத் தூய்மையான குடிநீர் இல்லாமல் தெருவில் நிறுத்தப்பட்டு விட்டனர் என்று தாய்லாந்தைச் சேர்ந்த ஐ.நா. அதிகாரி ரிச்சர்ட் ஹோர்சே கூறினார்.
தலைநகர் யாங்கூனில் மின்சாரம் இல்லாததால், கழிவு நீர் அகற்றும் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. முக்கியச் சாலைகள் முழுவதும் குப்பைகள் நிறைந்துள்ளன.
சர்வதேச உதவி கோரிக்கை!
இதற்கிடையில் சர்வதேச அளவில் நிவாரண உதவிக்காக மியான்மர் அரசு கோரிக்கை வைத்துள்ளது. இதுகுறித்து சர்வதேச அமைப்புகளுடன் மியான்மர் ராணுவ அதிகாரிகளும், அரசு அதிகாரிகளும் பேச்சு நடத்தி வருகின்றனர்.
அருகில் உள்ள தாய்லாந்து உடனடியாக சில நிவாரணங்களை அறிவித்துள்ளது. மற்றவை பற்றி நாளை அறிவிப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.