இந்தியாவின் மத்திய, கிழக்குப் பகுதிகளில் உள்ள பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய கிராமப் புறங்களில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் வேகமாகப் பரவி வருவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.
தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மாவோயிஸ்டுகள் தங்கள் அமைப்பை வலுப்படுத்தி வருவதாகவும் அமெரிக்கா தனது ஆண்டிறுதி அறிக்கையில் கூறியுள்ளது.
"இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்), நக்சலைட்டுகள் உள்ளிட்ட இடதுசாரித் தீவிரவாத இயக்கங்களுக்கும் அரசுக்கும் இடையில் நடக்கும் மோதல்களிலும், அந்தந்த இயக்கங்களுக்கு உள்ளே நடக்கும் மோதல்களிலும் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஜனநாயகப் பண்பாடு, உள்நாட்டுப் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ள இடதுசாரித் தீவிரவாத இயக்கங்கள் குறித்து இந்திய அரசு மிகவும் கவலை கொண்டுள்ளது" என்று அமெரிக்கா கூறுகிறது.
இந்தியாவில், 2007 ஆம் ஆண்டின் முதல் 7 மாதங்களில் 971 நக்சலைட் தாக்குதல்கள் நடந்ததாகவும், 2006 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் இது மிகவும் அதிகம் என்றும் கூறும் அமெரிக்கா, நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த மாநிலங்களாக ஜார்கண்ட், சத்தீஷ்கர், ஆந்திரப் பிரதேசம், பீகார், உத்தரகாண்ட், மேற்குவங்காளம், ஒரிசா, மராட்டியம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களைப் பட்டியலிட்டுள்ளது.