திபெத்தில் தற்போது நிலவும் சூழல், அங்கு அமைதியை உருவாக்குவதற்கான வழிகள் குறித்து சீன அரசு அதிகாரிகளும் தலாய் லாமாவின் சிறப்புப் பிரிநிதிகளும் நாளை பீஜிங்கில் சந்தித்துப் பேசுகின்றனர்.
சர்வதேச அளவில் எழுந்த நெருக்கடிகளை அடுத்துத் தலாய் லாமாவுடன் பேசுவதற்குத் தாங்கள் தயார் என்று சீனா அறிவித்து ஒரு வாரத்திற்கும் மேலாகிவிட்ட நிலையில் இச்சந்திப்பு நடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
தலாய் லாமாவின் சிறப்புத் தூதர் லோடி கியால்ட்சென் கியாரி, தூதர் கெல்சாங் கியால்ட்சென் ஆகியோர் சீன அரசின் பிரதிநிதிகளுடன் அதிகாரபூர்வமற்ற முதல்கட்டப் பேச்சு நடத்துவார்கள் என்று தலாய் லாமா இன்று அறிவித்தார்.
பேச்சின்போது, திபெத் பகுதியில் உடனடியாக அமைதியை உருவாக்குவதற்கு முன்னெடுக்க வேண்டிய விடயங்கள் பற்றி முதலில் விவாதிக்கப்படும் என்று தலாய் லாமா விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நிலமையைக் கையாள்வதில் சீன அரசு அதிகாரிகள் மேற்கொண்டு அடக்குமுறை நடவடிக்கைகள் குறித்துத் தலாய் லாமாவின் ஆழ்ந்த வருத்தம் சீன அரசிடம் தெரிவிக்கப்படுவதுடன், திபெத்தின் அமைதியை உருவாக்குவதற்கான ஆலோசனைகளும் வழங்கப்படும் என்று அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.