நேபாளப் பிரதமர் கிரிஜ பிரசாத் கொய்ராலாவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீதாராம் யச்சூரி இன்று அவரது இல்லத்தில் சந்தித்தார்.
நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் அதிக இடத்தில் வெற்றிபெற்று ஆட்சியமைக்க உள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீதாராம் யச்சூரி அங்குள்ள தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
நேற்று நேபாளக் காங்கிரஸ் கட்சித் தலைவர்களைச் சந்தித்த அவர், இன்று காலை பிரதமர் கிரிஜ பிரசாத் கொய்ராலாவைச் சந்தித்தார்.
பாலுவாட்டரில் நடந்த இந்தச் சந்திப்பில், நேபாளத்தில் தற்போது நிலவும் அரசியல் சூழல் பற்றியும், புதிதாக அமையவுள்ள அரசு பற்றியும் இருவரும் விவாதித்ததாகத் தெரிகிறது.
இதற்கிடையில் "1950 ஆம் ஆண்டு இந்திய- நேபாள உடன்பாட்டை மறு ஆய்வு செய்வதற்கான வாய்ப்பு குறித்தும் அவர்கள் இருவரும் விவாதித்தனர்" என்று நேபாள காங்கிரஸ் கட்சித் தலைவர் ஒருவர் யு.என்.ஐ. நிறுவனத்திடம் கூறியுள்ளார்.