பீஜிங்: திபெத்தில் சீனாவின் அடக்குமுறைகள் பற்றி உலக நாடுகள் அழுத்தம் கொடுத்து வருவதால் தலாய் லாமாவின் தூதரை சந்திக்க சீனா ஒப்புக் கொண்டுள்ளது.
ஆனால் இந்த பேச்சு வார்த்தைகள் பொதுப்படையாக இருக்கும் என்று தெரிகிறது. சீன அடக்குமுறைகளால் திபெத்தின் பண்பாடு மற்றும் சமய சுதந்திரங்கள் ஒடுக்கப்படுகின்றன என்று தலாய் லாமா குறிப்பிட்டது குறித்து இந்த பேச்சு வார்த்தை இருக்காது என்று தெரிகிறது.
திபெத் சீனாவின் ஒரு பகுதி என்ற அடிப்படையிலிருந்துதான் சீனா பேச்சு வார்த்தைகளை நடத்தவுள்ளது என்று செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
இதனை உறுதி செய்யும் விதமாகத்தான் சீன அரசும் கூறியுள்ளதாக தெரிகிறது. சீன அரசின் சம்பந்தப்பட்ட துறை மட்டுமே தலாய் லாமாவின் தூதரிடம் பேச்சு வார்த்தைகள் மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திபெத் விவகாரத்தினால் பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளுக்கு ஏனைய நாடுகளில் பலத்த எதிர்ப்பு இருப்பதால், ஒலிம்பிக் போட்டிகளை பிரச்சனைகளின்றி நடத்தி முடிப்பது நாட்டின் கவுரவப்பிரச்சனை என்று சீனா கருதுவதால் இந்த பேச்சு வார்த்தைக்கு ஒத்துக் கொண்டிருக்கலாம் என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.