பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் மதத் தீவிரவாதிகளுக்கும் பழங்குடியினருக்கும் இடையில் நடந்த கடுமையான மோதலில் 20 பேர் கொல்லப்பட்டதுடன், பலர் படுகாயமடைந்தனர்.
ஆஃப்கானிஸ்தான் எல்லையில் உள்ள வடமேற்குப் பாகிஸ்தானில் மதகுரு மங்கல் பாக் அஃப்ரிடி தலைமையிலான லஸ்கர்- இ இஸ்லாம் இயக்கத் தீவிரவாதிகளுக்கும் கூகி கெல் பழங்குடி இனத்தவருக்கும் இடையில் கடந்த மூன்று நாட்களாக மோதல் நீடித்து வருகிறது.
இஸ்லாமிற்கு எதிரான நடவடிக்கைகள், ஒழுக்கத்திற்கு முரணான நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட மதகுரு அஃப்ரிடி விதித்துள்ள 30 க்கும் மேற்பட்ட கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொள்ள கூகி கெல் பழங்குடியினர் மறுத்துவருவதே இம்மோதலுக்குக் காரணமாகும்.
இந்நிலையில் இருதரப்பினருக்கும் இடையில் நடந்துவரும் கடுமையான மோதலில் இதுவரை 20 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஜியோ தொலைக்காட்சி தெரிவிக்கிறது.
இருதரப்பினரும் ராக்கெட்டுகள், மோர்ட்டார்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களைக் கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கி வருகின்றனர். வடமேற்கு மாகாணத்தின் தலைநகர் பெஷாவரும் ஏராளமான மோர்ட்டார் குண்டுகள் விழுந்துள்ளன.