பாகிஸ்தான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட யூசப் ரஷா கிலானிக்கு, அதிபர் முஷாரஃப் இன்று பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பாகிஸ்தானின் 13-வது தேசிய சட்டப்பேரவையில் 24-வது பிரதமராக கிலானி பதவியேற்றுள்ளார். பாகிஸ்தான் மக்கள் கட்சியின் துணைத் தலைவரான கிலானியை பிரதமர் வேட்பாளாராக அக்கட்சி நிறுத்தியது. ஏற்கனவே, அதிக ஆதரவு பெற்றிருந்த நிலையில் நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த வாக்கெடுப்பில் 264 வாக்குகள் பெற்று அவர் அமோக வெற்றி பெற்றார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிபர் முஷாரஃபின் ஆதரவு பெற்ற பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (கியூ) கட்சி வேட்பாளர் சவுத்ரி இலாஹி வெறும் 42 வாக்குகளே பெற்று தோல்வி அடைந்தார். இதனையடுத்து, பாகிஸ்தான் பிரதமராக கிலானி இன்று மதியம் பதவியேற்றார்.
இந்த விழாவில் பெனாசீர் பூட்டோவின் கணவர் ஆசிப் அலி சர்தாரி, அவரது மகன் பிலாவால் பூட்டோ, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் ஆகியோர் பங்கேற்கவில்லை. இது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது.
அதிபருக்கு எதிராக முதல் உத்தரவு!
முன்னதாக, பாகிஸ்தான பிரதமராக கிலானி நேற்று தேர்ந்தெடுக்கப்பட்ட உடனேயே அதிபர் முஷாரஃப் மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிராக உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டிருந்த நீதிபதி இப்திகார் முகமது சவுத்ரி உட்பட அனைத்து நீதிபதிகளும் நேற்று இரவே விடுவிக்கப்பட்டனர்.