பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி நடந்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு இன்று நாடாளுமன்றம் கூடியது.
நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாவிட்டாலும் நாடாளுமன்றத்திற்கு வந்த பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் ஆஷிப் அலி ஜர்தாரி செய்தியாளர்களிடம், "இன்று சர்வாதிகாரத்தின் இறுதி நாள்" என்று கூறினார்.
பாகிஸ்தான் தேசியச் சட்டப் பேரவையில் மொத்தம் 342 இடங்கள் உள்ளன. இதில் 328 இடங்களுக்குத் தேர்தல் மூலம் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள இடங்களுக்கான தேர்தல் பல்வேறு காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் நடந்த நிகழ்ச்சியில் 328 உறுப்பினர்களுக்கும் அவைத் தலைவர் செளத்ரி அமிர் ஹூசைன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
ஆனால், இந்தப் பதவிப் பிரமாணம் 1973 ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தின் படி நடந்ததா அல்லது தற்போது அமலில் உள்ள அரசியலமைப்புச் சட்டத்தின்படி நடந்ததா என்பது தெரியவில்லை.
ஆஷிப் அலி ஜர்தாரியும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவர் நவாஸ் ஷெரீஃப்பும் கேலரியில் அமர்ந்து பதவியேற்பு நிகழ்ச்சிகளைப் பார்வையிட்டனர்.
பதவியேற்பு நிகழ்ச்சிக்கு முன்னதாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொல்லப்பட்ட பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.