'பாகிஸ்தானில் கடந்த ஆண்டு மோசமான நிலையில் மனித உரிமைகள் இருந்துள்ளது' என்று அமெரிக்காவின் மனித உரிமை அறிக்கை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரஃப் கடந்த ஆண்டில் 42 நாட்கள் அவசரநிலை பிரகடனத்தை அறிவித்தது, உச்ச நீதிமன்ற நீதிபதிகளை பதவி நீக்கம் செய்தது போன்றவை பாகிஸ்தானில் மனித உரிமைகள் மோசமான நிலையை அடைய முக்கிய காரணங்கள் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
மனித உரிமைகள் குறித்த ஆண்டறிக்கையை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ் வெளியிட்டார். அதில், பத்திரிக்கைகளும், பொதுமக்களும் நீதித்துறைக்கு ஆதரவளித்து தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரியை மீண்டும் பதவியில் அமர்த்தியது. தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதற்கு தகுதியில்லை என்று உச்ச நீதிமன்றம் அறிவிக்குமோ என்று நினைத்த முஷாரஃப், அவசர நிலையை அறிவித்து, அரசியலமைப்பையும் மதிக்காமல் உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளை மாற்றினார்' என்று டெய்லி டைம்ஸ் என்ற பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
புதிய அதிகாரங்களின் மூலம் பேச்சு உரிமை உட்பட மக்களின் அடிப்படை சுதத்திரத்தையும் முஷாரஃப் ஒடுக்கினார். இவ்வாறு செய்து தனது அதிபர் பதவிக்கான அதிகாரத்தை உயர்த்திக்கொண்டார். அவசர நிலை அமலில் இருந்தபோது, பத்திரிக்கை சுதந்திரத்திலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. 6 ஆயிரம் வழக்கறிஞர்கள், நீதிபதிகள், அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள், சமூக நல அமைப்பினர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஆண்டின் இறுதியில், 10க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், நீதிபதிகள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர்.
குடிமக்களின் அடிப்படை உரிமைகளில் தலையிட்டது, நீதித்துறையினர் கொலை, மாயம், குழந்தைகள் பாலியல் கொடுமை போன்ற பல்வேறு நிகழ்வுகளும் பாகிஸ்தானில் மனித உரிமைகள் மோசமான நிலையை அடைய காரணங்கள் என்று அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.