மலேசிய நாடாளுமன்றம், மாகாண சட்டப் பேரவைகளுக்கான தேர்தல் இன்று நடக்கிறது.
மொத்தம் 222 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், 13 மாகாணங்களுக்கும் ஒரே நேரத்தில் நடைபெறும் இந்தத் தேர்தலின் முடிவுகள் நாளை காலையிலேயே வெளியாகிவிடும்.
நாடு முழுவதும் 21,822 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பலத்தப் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடக்க உள்ளது.
மலேசியாவின் 27 மில்லியன் மக்கள்தொகையில் 60 விழுக்காடு மலேசிய முஸ்லிம்களும், சீனாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள் (புத்த மற்றும் கிறிஸ்தவ மதத்தினர்) 25 விழுக்காட்டினரும், பெரும்பாலான தமிழர்களைக் கொண்ட இந்திய வம்சாவளியினர் 7.8 விழுக்காட்டினரும் உள்ளனர்.
பொதுத் தேர்தலை நடத்த ஏதுவாக மலேசிய நாடாளுமன்றம் அதன் பதவிக் காலம் முடிவதற்கு ஒரு மாதம் முன்கூட்டியே கலைக்கப்பட்டதாக மலேசிய பிரதமர் அப்துல்லா அகமது படாவி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
அண்மைக்காலமாக இந்திய வம்சாவளியினரின் போராட்டங்கள், மதம், அரசியல் சார்ந்த சர்ச்சைகள் ஆகியவற்றில் ஆளும் பாரிசன் தேசிய கட்சி எடுத்த தவறான முடிவுகளின் பலன் இத்தேர்தலில் எதிரொலிக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.