ஈரான்-பாகிஸ்தான்-இந்தியா ஆகிய நாடுகளிடையேயான குழாய் எரிவாயு திட்டத்தில் சீனாவும் இணையலாம் என்று பாகிஸ்தான் பெட்ரோலிய அமைச்சக செயலாளர் பர்ருக் தெரிவித்துள்ளார்.
ஈரானில் இருந்து பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு குழாய் மூலமாக எர்வாயு கொண்டுவர இந்தியா தீவிரம் காட்டிவரும் நிலையில், இத்திட்டத்தில் சீனா இணைவது குறித்து அதிகாரப்பூர்வமாக தகவல் ஏதும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில், ஈரானில் இருந்து குழாய் மூலமாக சீனாவுக்கு எரிவாயு கொண்டுவர பாகிஸ்தான் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்று பர்ருக் கூறினார்.
பாகிஸ்தான், சீன நாடுகளை இணைக்கும் பழங்கால பாதையான கராகோரம் நெடுஞ்சாலையை சீரமைக்கும் பணியை இருநாடுகளும் மேற்கொண்டுள்ளது. இந்த நெடுஞ்சாலை வழியாக குழாய் அமைக்க தயாராக இருப்பதாக சீன அதிகாரிகள் கூறுகின்றனர்.
இத்திட்டத்தில் ஈரான், பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளன. ஆனால், இந்திய பாகிஸ்தான் உடனான ஒப்பந்தம் இன்னும் முடிவாகவில்லை" என்றும் பர்ருக் கூறினார்.