அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் இந்தியா தனது உள்நாட்டு அழுத்தங்களைச் சமாளிப்பதற்குக் கூடுதல் அவகாசம் எடுத்துக் கொள்ளலாம் என்று அமெரிக்கா கூறியுள்ளது.
இந்திய- அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை வருகிற ஜூலை மாதத்திற்குள் நிறைவேற்றுகிற வகையில், சர்வதேச அணுசக்தி முகமையுடன் தனித்த கண்காணிப்பு ஒப்பந்தம் குறித்து நடத்திவரும் பேச்சுகளை மே மாதத்திற்குள் இந்தியா முடித்துக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா கெடு விதித்திருந்தது.
இது குறித்து அந்நாட்டு அயலுறவு அமைச்சக துணை அமைச்சர் நிகோலஸ் பர்ன்சிடம் கேட்டதற்கு, "நாங்கள் நிர்ணயித்துள்ள காலக் கெடுவிற்குள் அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவது சாத்தியமே... இருந்தாலும், இந்தியா தனது உள்நாட்டு அழுத்தங்களைச் சமாளிப்பதற்கும் வாய்ப்பளிக்கப்படும்" என்றார்.
அமெரிக்க அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் டானா பெரினோ கூறுகையில், "அமெரிக்க அதிபரின் பதவிக் காலம் முடிவதற்குள் அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கு எங்களால் இன்னும் சிறிது அவகாசம் கூடத் தர முடியும். இந்தியாவில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு அழுத்தம் அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றும் நடவடிக்கைகளை வேகப்படுத்தும் என்று எதிர்பார்க்கிறோம்" என்றார்.