சீக்கிய தீவிரவாதிகளால் குண்டு வைத்து நடுவானில் வெடித்துச் சிதறிய ஏர் இந்தியாவின் கனிஷ்கா விமானத்தில் பலியான பயணிகளின் குடும்பத்தினரிடம் கனடா அரசு பொது மன்னிப்பு கோர வேண்டும் என்று அது தொடர்பான விசாரணை ஆணையத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
கடந்த 1985 ஆம் ஆண்டு தீவிரவாதிகளால் வெடிக்குண்டு வைத்து தகர்க்கப்பட்ட ஏர் இந்தியாவுக்கு சொந்தமான கனிஷ்கா விமானத்தில் பயணம் செய்த 329 பயணிகள் உயிரிழந்தனர். இந்த வழக்கை கனடா புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்திய விதம் பெரும் பிரச்சனையைக் கிளப்பியதைத் தொடர்ந்து நீதிபதி ஜான் மேஜர் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் விசாரணை இன்றுடன் முடிவடைகிறது.
இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜாக்கஸ் ஷோர் தாக்கல் செய்த மனுவில்,கனிஷ்கா விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினரிடம் பொது மன்னிப்பு கோர வேண்டும், கூடுதல் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும், கனடா பாதுகாப்பு நிறுவனங்களில் சீர்திருத்தத்தை கொண்டு வர வேண்டும் என்று கோரி இம்மனுவை தாக்கல் செய்துள்ளார்.