பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் முறைகேடுகள் நடந்தால் பாகிஸ்தான் மக்கள் கட்சி போராட்டம் நடத்தும் என்று பெனாசிர் புட்டோவின் கணவர் ஆஷிப் அலி ஜர்தாரி கூறியுள்ளார்.
பெனாசிர் மரணத்திற்குப் பின்பு பாகிஸ்தான் மக்கள் கட்சியை வழிநடத்தி வரும் ஜர்தாரி செய்தியாளர்களிடம் இன்று கூறுகையில், "நடக்கவுள்ள தேர்தலில் பாகிஸ்தான் மக்கள் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும். தேர்தலின் போது முறைகேடுகள் நடந்தால் எங்கள் கட்சித் தொண்டர்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்துவார்கள்.
தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட நாங்கள் அழைப்பு விடுத்துள்ளோம். இதுதான் அதற்கு ஏற்ற தருணம்" என்றார்.
"பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர்தான் பிரதமர் வேட்பாளராக இருப்பார். ஆனால், இதுவரை அதுபற்றி நாங்கள் முடிவெடுக்கவில்லை. கட்சியை மேம்படுத்துவதற்கான பணிகள் ஏராளமாக நிலுவையில் உள்ளன. அவற்றை எல்லாம் முடித்த பிறகு பிரதமர் வேட்பாளர் குறித்து முடிவு செய்யப்படும்.
அதுவரை மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ தான் எங்கள் கட்சியை வழி நடத்துகிறார் என்று நாங்கள் கருதுகிறோம். அவர்தான் இன்னும் எங்கள் பிரதமராக உள்ளார். தேர்தலுக்குள் அவரின் இருக்கைக்குத் தகுதியான ஆள் தேர்வு செய்யப்பட்டு விடுவார்" என்றார் ஜர்தாரி.
இரண்டு முறை பாகிஸ்தான் பிரதமராக பதவி வகித்துள்ள பெனாசிர் புட்டோ கடந்த டிசம்பர் 27 ல் தேர்தல் பிரசாரத்தின் போது கொல்லப்பட்டார்.
அவர் தனது உயிலில் கணவர் ஜர்தாரியை அரசியல் வாரிசாக குறிப்பிட்டிருந்தார். எனினும் அவரது 19 வயது மகன் பிலாவல் கட்சி தலைவராக அறிவிக்கப்பட்டார்.
ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் பிலாவல் படிப்பை முடிக்கும் வரை கட்சி தலைவர் பொறுப்பை ஜர்தாரி ஏற்றுக் கொண்டுள்ளார்.