மலேசியாவில் 12 வது பொதுத் தேர்தல் மார்ச் 8 ஆம் தேதி நடக்கும் என்று அந்நாட்டுத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இது குறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மலேசியத் தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் ரஷீத் அப்துல் ரகுமான், "பிப்ரவரி 24 ஆம் தேதியை வேட்புமனுத் தாக்கல் நாளாகத் தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது. மார்ச் 8 ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கும்" என்றார்.
முன்னதாக நேற்று மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அந்நாட்டுப் பிரதமர் அப்துல்லா அகமது படாவி அறிவித்தார். மேலும், எல்லா மாகாணங்களின் சட்டப் பேரவைகளையும் கலைக்குமாறு உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தப் பொதுத் தேர்தலில் மலேசிய நாடாளுமன்றத்திற்கு 222 உறுப்பினர்களும், மாகாணங்களின் சட்டப் பேரவைகளுக்கு 505 உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.