அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடுபவரைத் தேர்ந்தெடுப்பதற்காக 3 மாநிலங்களில் நடந்த தேர்தலில் ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தி பாரக் ஒபாமா வெற்றி பெற்றுள்ளார். இதனால் இருவருக்கும் இடையிலான இழுபறி நீடித்து வருகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில், தற்போது இருக்கும் அதிபரோ துணை அதிபரோ மீண்டும் போட்டியிடாத சூழ்நிலையால் ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி ஆகிய இரு கட்சிகளிலும் வேட்பாளர் யார் என்பதை முன்கூட்டியே கணிக்க முடியாத சூழல் நிலவி வருகிறது.
வேட்பாளரைத் தேர்வு செய்யும் தேர்தல்கள் ஏற்கெனவே 30க்கும் மேற்பட்ட மாநிலங்களில் முடிந்துள்ள நிலையிலும், இருகட்சிகளின் சார்பிலும் யார் வெற்றிபெற்று அதிபர் தேர்தலில் போட்டியிடுவர் என்பதைக் கணிக்க முடியவில்லை.
இந்நிலையில், நெப்ராஸ்கா, லூசியானா, வாஷிங்டன் (தலைநகர் அல்ல) ஆகிய மாநிலங்களிலும் வர்ஜின் தீவுகளிலும் நடந்த வேட்பாளர் தேர்தல்களில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட பாரக் ஒபாமா தன்னுடன் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தி வெற்றி பெற்றிருக்கிறார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட வேண்டுமானால் குறைந்தபட்சம் 2,025 பிரதிநிதிகளின் ஆதரவு தேவை. தற்போதைய நிலவரப்படி ஒபாமாவுக்கு 1,075 பிரதிநிதிகளின் ஆதரவும், ஹிலாரிக்கு 1,095 பிரதிநிதிகளின் ஆதரவும் கிடைத்துள்ளது.
சூப்பர் டெலிகேட்ஸ் எனப்படும் போட்டியிடும் கட்சியின் பிரதிநிதிகள், கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர்கள், முன்னாள் துணை அதிபர்கள், ஆளுநர்கள் ஆகியோரில் பலர் தங்களது ஆதரவு யாருக்கு என்பதை இன்னும் வெளிப்படையாகக் கூறவில்லை. இதுதவிர போட்டியிலிருந்து விலகிய ஜான் எட்வர்ட்சும் தனது ஆதரவை யாருக்கும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குடியரசுக் கட்சியிலும் இழுபறி!
கன்சாஸ், லூசியானா ஆகிய மாநிலங்களில் நடந்த வேட்பாளர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் ஹக்கபீ வெற்றி பெற்றிருக்கிறார். இதனால், குடியரசுக் கட்சியில் முன்னிலை பெற்றிருந்த ஜான் மெக்கைனுக்கு தற்போது போட்டி ஏற்பட்டுள்ளது.
பிரதிநிதிகள் ஆதரவு என்ற அடிப்படையில், ஹக்கபீயால் மெக்கைனை தற்போது நெருங்க முடியவில்லை என்றாலும், ஹக்கபீயின் தற்போதைய வெற்றி மெக்கைனுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆயினும், அடுத்து நடைபெற இருக்கும் தேர்தல்களில் அமோக வெற்றி பெற்றால் மட்டுமே ஹக்கபீயால் மெக்கைனை தோற்கடிக்க முடியும்.