பாகிஸ்தானில் அவாமி தேசிய லீக் கட்சி நடத்திய தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டதுடன், 50க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
பாகிஸ்தானில் வருகிற 18 ஆம் தேதி நடக்கவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு, வடமேற்கு மாகாணம் சர்சத்தா அருகில் உள்ள நகாய் என்ற இடத்தில் அவாமி தேசிய லீக் கட்சியின் சார்பில் பிரச்சாரக் கூட்டம் நடந்தது.
அப்போது, கூட்டத்திற்குள் மறைந்திருந்த பயங்கரவாதி ஒருவன் தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில் 25 பேர் உடல் சிதறி பலியானதுடன், 50-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
அவாமி தேசிய லீக் கட்சியின் மாகாணத் தலைவரை குறி வைத்தே இந்த தாக்குதல் நடந்ததாகவும், தேர்தலைத் தள்ளி வைக்க முஷாரஃப் அரசு மேற்கொண்ட சதி திட்டமே இந்த தாக்குதல் என்றும் அக்கட்சியினர் குற்றம்சாற்றினர்.
முன்னதாக, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை கொலை செய்ய தலிபான் இயக்கத் தலைவன் பைதுல்லா மசூத் ஆதரவு பயங்கரவாதிகள் பல்வேறு நகரங்களில் ஊடுருவி இருப்பதாக பாகிஸ்தான் அரசுக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து, 18-ஆம் தேதி நடக்க இருக்கும் தேர்தல் தள்ளி வைக்கப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ படுகொலையை அடுத்து, ஏற்கனவே 8-ஆம் தேதி நடப்பதாக இருந்த தேர்தல் 18-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.