பொதுத் தேர்தலை வெளிப்படையாகவும் முறைகேடின்றியும் நடத்துவது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பென்றும், அதில் ராணுவம் தலையிடாது என்றும் பாகிஸ்தான் ராணுவத் தளபதி அஷ்ஃபாக் பர்வேஷ் கியானி கூறியுள்ளார்.
ராவல்பிண்டியில் நடந்த ராணுவ நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் விடயத்தில் அரசமைப்புகளுக்கு உதவுவது மட்டுமே ராணுவத்தின் பணியாகும். அதுவும் தேவைப்படும்போது மட்டுமே என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.
பொதுத் தேர்தலை அமைதியாகவும், வெளிப்படையாகவும் முறைகேடின்றியும் நடத்துவது முழுக்க முழுக்கத் தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு. தேர்தல் நேரத்தில் வன்முறைகள் ஏற்படாமல் தடுத்து உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டியது ராணுவத்தின் கடமை" என்றார்.