பிரிட்டனில் 13 வயதிற்குட்பட்ட 3 லட்சத்து 50 ஆயிரம் சிறுவர்கள் ஏற்கனவே மது அருந்தும் பழக்கத்தை துவக்கிவிட்டனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதி வன்முறை சம்பவங்களில் மது அருந்துபவர்களுக்கு தொடர்புள்ளது. பெரும்பாலான இளம் வயதினர் வீட்டிலேயே மது அருந்துபவர்களாக உள்ளனர் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து அந்நாட்டு உள்துறை செயலர் ஜக்குய் சுமித் கூறியதாவது: வீட்டிலேயே மதுப்பழக்கத்தை ஊக்குவிக்கும் பெற்றோர்க்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு வீட்டிலேயே மது அருந்திய சிறுவர்கள் அதனை தொடர்ந்து பழக்கப்படுத்திக் கொள்கின்றனர். இதனால் 13 வயதுற்குட்பட்ட சிறுவர்கள் அதிகளவில் மது அருந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய விஷயம்.
பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் தங்களது குழந்தைகளை தங்களது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும். பொது இடங்களில் மது அருந்தும் சிறுவர்களுக்கு ஆயிரம் பவுண்டு அபராதம் போன்ற நடவடிக்கைக்கு பெற்றோர்கள் ஒத்துழைப்பதில்லை. இந்த மாதத்தில் இருந்து போலீசார் 18 வயதிற்கும் குறைவாக பொது மது அருந்துபவர்களை பிடித்து தக்க நடவடிக்கைக்கு உட்படுத்துவார்கள்.
உணவு விடுதிகள், மதுக்கடைகள், கிளப்களில் குறிப்பிட்ட வயதினருக்கு மட்டுமே ஆல்கஹாலை விற்பனை செய்ய அறிவுறுத்தப்படும். சில்லரை வியாபாரிகளையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர சட்டம் தீவிரமாக அமல்படுத்தப்படும். மது அருந்தினால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த 10 மில்லியன் பவுண்டு மதிப்பிலான விளம்பர பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படும்" இவ்வாறு அவர் கூறினார்.