சிறிலங்காவில் ராணுவத் தலைமை அருகில் நடந்த கண்ணிவெடித் தாக்குதலில் பேருந்தில் பயணம் செய்த 5 ராணுவத்தினர் உட்பட 15 பேர் கொல்லப்பட்டதுடன், 17 பேர் படுகாயம் அடைந்தனர்.
கொப்பேக்கடுவச் சந்திப்பில் நேற்று மாலை 4 மணிக்கு நடந்த இந்தக் கண்ணிவெடித் தாக்குதலில் சிக்கிய பேருந்து, அனுராதபுரத்தில் இருந்து மணலாறு நோக்கிச் சென்று கொண்டிருந்ததாக புதினம் இணைய தளச் செய்தி தெரிவிக்கிறது.
இத்தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 15 பேர் கொல்லப்பட்டனர். படுகாயமடைந்த 17 பேர் அனுராதபுரம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கொல்லப்பட்டவர்களில் 3 சிறுவர்கள், 2 பெண்கள், 10 ஆண்கள் என்றும், காயமடைந்தவர்களில் 2 சிறுவர்கள், 4 பெண்கள், 11 ஆண்கள் அடங்குவர் என்றும் மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மரம் ஒன்றில் பொருத்தப்பட்ட கண்ணிவெடி மூலம் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக சிறிலங்கா ராணுவச் செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்கார தெரிவித்தார்.