பாகிஸ்தானின் பல்வேறு முக்கிய இடங்களில் மிகப்பெரிய தாக்குதல்களை நடத்தும் திட்டத்துடன் 600 க்கும் மேற்பட்ட தற்கொலைப் படை பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
கராச்சியில் நடந்த தற்கொலைத் தாக்குதல்களில் தொடர்புடைய அல் கய்டா இயக்கப் பயங்கரவாதிகள் காசிம் தூரி, டேனிஷ் என்ற தல்ஹா ஆகிய இரண்டு பேர் கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.
காவலர்கள் நடத்திய ரகசிய விசாரணையில் அவர்கள், "கராச்சியில் தற்போது 600 பயங்கரவாதிகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் தற்கொலைத் தாக்குதல்களை நடத்தும் அளவிற்கு மனதளவில் தயார் செய்யப்பட்டவர்கள்" என்று தெரிவித்துள்ளனர்.
“கராச்சியில் ஊடுருவியுள்ள பயங்கரவாதிகளில் பலர் லால் மசூதியில் படித்தவர்கள் ஆவர். தங்கள் மசூதிக்குள் ராணுவம் புகுந்ததற்குப் பழிவாங்கும் வகையில் தாக்குதலுக்குத் தயாராகி உள்ளனர்” என்றும் அவர்கள் கூறியதாக டெய்லி டைம்ஸ் நாளிதழ் செய்தி தெரிவிக்கிறது.
ஆயுதம், வெடிபொருட்கள், மற்ற தேவைகளுக்காக அயல்நாட்டு வங்கிகளைக் கொள்ளையடித்து, அந்த நிதியை வானாவில் உள்ள தங்களின் தலைமையகத்திற்கு பயங்கரவாதிகள் அனுப்பி வைத்த குற்றச்சாற்றுகள் நிரூபிக்கப்பட்டு உள்ளதாகப் பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பயங்கரவாதிகள், வானாவில் இருந்து வெடிபொருட்களைப் பெற்று, அதன் மூலம் தற்கொலைத் தாக்குதல்களுக்குத் தயாராகி வருவதாகவும், பிப்ரவரி 18 ஆம் தேதி நடக்கவுள்ள பொதுத் தேர்தலைச் சீர்குலைப்பதற்கு அவர்கள் திட்டமிடலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
லால் மசூதி மீதான தாக்குதலுக்கு உடந்தையாக இருந்த, ஆதரவளித்த எல்லா அதிகாரிகளுக்கும் பயங்கரவாதிகள் குறிவைத்துள்ளனர் என்று விசாரணை அதிகாரிகள் கூறியதாக டெய்லி டைம்ஸ் தெரிவிக்கிறது.