இலங்கை இனப் பிரச்சனைக்குத் தீர்வாக சிறிலங்கா அரசு வெளியிட்ட அதிகார பகிர்வுத் திட்டத்திற்கு, மக்களிடம் ஆதரவு கிடைக்கவில்லை.
இலங்கை இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்காக, சிறிலங்கா அரசின் சார்பில் கடந்த 2006-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு, ஏறத்தாழ 60 முறை கூடித் தயாரித்த அதிகார பகிர்வு தொடர்பான புதிய சமரச திட்டத்தின் இடைக்கால அறிக்கை, நேற்று முன்தினம் அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில், இலங்கையில் தமிழர் பகுதியான வடக்கு மாகாணத்தில், தேர்தல் நடைபெறும் வரை `இடைக்கால அரசு' (கவுன்சில்) அமைப்பது உள்பட பல்வேறு யோசனைகள் தெரிவிக்கப்பட்டு உள்ளன. அதன் விவரம் வருமாறு:
"அரசியல் அனுபவமிக்க, பிராந்திய நலன் மற்றும் மக்களின் மேம்பாட்டில் அக்கறையுள்ள, அந்த பகுதி மக்களால் ஏற்றுக் கொள்ளக்கூடிய தனி நபர்கள் இந்த அரசில் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள்.
தேர்தல் நடக்கும் வரை அந்த உறுப்பினர்கள் ஆட்சி நிர்வாகத்தில் ஆளுநருக்கு ஆலோசனை வழங்குவார்கள். காவல்துறை மற்றும் நீதிமன்ற பணிகளுக்கு தமிழ் பேசுகிறவர்கள் ஊழியர்களாக தேர்ந்து எடுக்கப்பட வேண்டும்.
சிங்களர்கள் சிறுபான்மையினராக உள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கிழக்கு மாகாணத்தை பொருத்தவரை, மாகாண கவுன்சிலுக்கு தேர்தல் நடத்துவதற்கு உகந்த சூழ்நிலை உள்ளதால், அங்கு உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும்.
ஆனால், விடுதலைப்புலிகளின் ஆதிக்கத்தில் உள்ள வடக்கு பிராந்தியத்தில் தேர்தல் நடத்துவதற்கான சூழ்நிலை இல்லாததால், அங்கு அதிகார பகிர்வின் பயன் மக்களுக்கு கிடைக்கச் செய்வதற்காக இடைக்கால கவுன்சில் ஒன்றை அமைப்பதற்கு அதிபர் உடனடியாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.'' இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
இந்தப் புதிய சமரச திட்டம் முழுமையாக அமல்படுத்தப்படும் என்று தெரிவித்த அதிபர் மகிந்த ராஜபக்ச, தீவிரவாதிகளை ஒடுக்குவதில் அரசு மேற்கொண்டுள்ள நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்று அறிவித்தார்.
இடைக்கால அறிக்கை பற்றி சிறிலங்கா அயலுறவு அமைச்சர் ரோகிதா பொகல்லகமா கூறுகையில், விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் ஆயுதங்களை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார். சிறிலங்காவுக்கு நிதி உதவி செய்யும் நாடுகளான நார்வே, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் புதிய சமரச திட்டத்தை வரவேற்று இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆதரவு இல்லை
ஆனால், இந்த புதிய சமரச திட்டத்துக்கு இலங்கை மக்களிடமும், அரசியல் ஆர்வலர்களிடமும் போதிய ஆதரவு இல்லை என்று தெரிய வந்துள்ளது. ஏற்கனவே இருந்து வந்த ஆட்சி முறைக்கும் புதிய சமரச திட்ட யோசனைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்றும், 25 ஆண்டுகளாக நடைபெற்று வரும் போர் மேலும் பல ஆண்டுகள் நீடிக்கலாம் என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.
இந்தியா வரவேற்பு
சிறிலங்கா அரசின் அதிகார பகிர்வு திட்டத்தை இந்தியா வரவேற்று இருக்கிறது. இது குறித்து இந்திய அயலுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறுகையில், "அதிகார பகிர்வு மற்றும் இலங்கை அரசியல் சட்ட அலுவல் மொழி பிரிவு தொடர்பான இடைக்கால சமரச திட்டம் வரவேற்கத்தக்கது'' என்று குறிப்பிட்டார்.