பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ படுகொலை செய்யப்பட்டதற்கு அல் கய்டாவும், அதன் தலைவர்களில் ஒருவனான பைதுல்லா மசூத்தும் தான் பொறுப்பு என்று அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு சி.ஐ.ஏ. வின் இயக்குநர் மைக்கேல் ஹைடன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
பாகிஸ்தானில் அமைதியைச் சீர்குலைத்து பதற்றத்தை நீடிக்கச் செய்ய விரும்பும் சக்திகள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன. சில நேரங்களில் பல அமைப்புகள் ஒருங்கிணைந்தும் தங்களின் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.
அதில் ஒரு பகுதியாகத்தான் பெனாசிர் மீதான தாக்குதல் நடந்துள்ளது. இதற்கு பழங்குடியின மக்களிடையில் தீவிரவாதத்தை வளர்த்துவரும் பயங்கரவாதி பைதுல்லா மசூத்தும், அவனுக்கு உதவியாக இருக்கக் கூடிய அல் கய்டா இயக்கமும் தான் காரணம். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பாகிஸ்தானுடன் அமெரிக்காவுக்கு இன்னும் முழுமையான கூட்டு ஏற்படவில்லை. ஆனால், பெனாசிர் படுகொலைக்குப் பிறகு இருநாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதேநேரத்தில், பெனாசிர் படுகொலைக்குப் பிறகு பாகிஸ்தான் சென்ற அமெரிக்க அதிகாரிகள் அனைவரும், பாகிஸ்தானின் நிலைத்தன்மையை சிறப்பித்துப் பேசிய விவரங்கள் எனக்கு ஆச்சர்யத்தை தருகின்றன.
சிறப்புப் படைகளின் தலையீடு உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம், பாகிஸ்தானில் உருவாகியுள்ள நெருக்கடியை தீர்ப்பதற்கு உள்ள வாய்ப்புகள் குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகையின் உளவுத் துறை அதிகாரிகளும், பெண்டகன் ராணுவ அதிகாரிகளும் தொடர்ந்து விவாதித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.