இலங்கையில் வடமேற்கு மன்னார் மாவட்டத்தில் சிறிலங்கா ராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்த கடுமையான மோதலின் இறுதியில் 33 பேர் பலியானதுடன், 45 பேர் படுகாயமடைந்ததாக இருதரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மன்னாரின் பரப்பகண்டல் பகுதியில் நேற்று மாலை 4.30 மணிக்கு விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது சிறிலங்கா ராணுவம் நடத்திய தாக்குதலில், புலிகளின் பெண்கள் பிரிவுத் தலைவர் உட்பட 19 பேர் கொல்லப்பட்டதாகவும், 30 பேர் படுகாயமடைந்ததாகவும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புலிகளின் தகவல் தொடர்பை இடைமறித்துக் கேட்டபோது, கொல்லப்பட்ட பெண் புலியின் பெயர் சுடர்மலர் என்று தெரியவந்தது என்றும், இத்தாக்குதலில் ராணுவத்தின் தரப்பில் ஒருவர் மட்டும் பலியானதுடன், 5 பேர் படுகாயமடைந்தனர் என்றும் அமைச்சகத்தின் செய்திக் குறிப்பு கூறுகிறது.
இதற்கிடையில், மன்னார் மோதலில் ராணுவத்தினர் 14 பேர் கொல்லப்பட்டதுடன், 40க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர் என்று மன்னாரில் முகாமிட்டுள்ள புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக, விடுதலைப் புலிகளின் ஆதரவு இணைய தளங்கள் தெரிவிக்கின்றன.