இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் இன்று மதியம் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் தீவின் கிழக்கு கடற்கரை முழுவதும் உணரப்பட்டதால் பொதுமக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியில் ஓடி வந்தனர்.
சுமத்ரா தீவில் பெங்குலு மாகாணத்தில் உள்ள முகோமுகோ நகரத்தில் இன்று மதியம் இந்திய நேரப்படி 12.59 மணிக்கு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்தோனேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியப் பெருங்கடலில் சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.3 ரிக்டராகப் பதிவானது.
இதனால் முகோமுகோ நகரத்தில் உள்ள வீடுகளில் விரிசல் ஏற்பட்டதாகவும், சாலைகளில் வெடிப்புகள் உண்டானதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தின் அதிர்வினால் அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியில் ஓடி வந்தனர்.
இந்த நிலநடுக்கம் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கருவிகளில் 6.0 ரிக்டராகவும், அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் கருவிகளில் 5.9 ரிக்டராகவும் பதிவாகியுள்ளது.
இதே பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி 29 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.