பெனாசிர் புட்டோவைச் சுட்டதாகக் கூறப்படும் கொலையாளிகள் இருவரின் புகைப்படங்களை பாகிஸ்தான் நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ளது.
பெனாசிரை நோக்கி 2 பேர் துப்பாக்கியால் சுடும் காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளன. அதில் ஒருவன் வெள்ளைத் துணியால் முகத்தை மூடி இருக்கிறான். மற்றொருவன் டிப்-டாப்பாக உடை அணிந்து இருக்கிறான்.
இதே போல பாகிஸ்தான் உள்துறையும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. அதில் டிப்-டாப் மனிதன் துப்பாக்கியால் சுட்டபடி செல்லும் 4 காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இவற்றை வைத்து கொலையாளிகளை அடையாளம் காணும் முயற்சி நடந்து வருகிறது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ கடந்த 27 ஆம் தேதி ராவல்பிண்டி நகரில் படுகொலை செய்யப்பட்டார். அவரது கொலையில் பல்வேறு மர்மங்கள் நிறைந்துள்ளன.
அல் காய்டா இயக்கத்தினர்தான் அவரைக் கொன்றனர் என்று பாகிஸ்தான் அரசும், பாகிஸ்தான் அரசுதான் அவரைக் கொன்றது என அல் காய்டாவும் குற்றம்சாற்றியுள்ளன.
அவர் எப்படி இறந்தார் என்பதிலும் பல்வேறு குழப்பங்கள் உள்ள நிலையில் பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ. யில் உள்ள சில பழமைவாத அதிகாரிகள்தான் அவரைக் கொன்றிருக்கக்கூடும் என்ற கருத்தும் தற்போது நிலவி வருகிறது.