பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள வழிபாட்டுக் கூடங்கள் மற்றும் மதத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோரைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று அந்நாட்டு உளவுத்துறை எச்சரித்துள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இதேபோல பாகிஸ்தான் உளவு நிறுவனங்கள் எச்சரித்தபடி கராச்சியில் தாக்குதல்கள் நடந்ததால், இம்முறை உச்சகட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்று உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
வடமேற்கு பாகிஸ்தானில் இயங்கிவரும் சில தாலிபான் இயக்கங்கள், ஜனவரி 8 ஆம் தேதி நடக்கவுள்ள பொது தேர்தலைச் சீர்குலைப்போம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால், அரசியல் தலைவர்களின் பொதுக் கூட்டங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு கொடுக்கப்படுகிறது. குறிப்பாக, பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பெனாசிர் புட்டோவுக்கு அரசு எழுதியுள்ள கடிதத்தில் தனியாகப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.