பாகிஸ்தானில் நடக்கவுள்ள பொதுத் தேர்தலின் ஏற்பாடுகளை ராணுவத்திடம் கொடுக்க வேண்டும் என்று அந்நாட்டின் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ விடுத்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது.
தேர்தல் ஏற்பாடுகளை ராணுவத்திடம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலனைக்கு கூட எடுத்துக்கொள்ள முடியாது என்று பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தின் செயலர் கன்வார் முகமது கான் தில்ஷாத் கூறிவிட்டார்.
இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பாகிஸ்தான் மக்கள் கட்சியின் சார்பில் கொடுக்கப்பட்டுள்ள எல்லா புகார்களும் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுவரை முறைகேடு நடக்க வாய்ப்புள்ள வாக்குச் சாவடிகள் என்று எதையும் அக்கட்சியினர் தெரிவிக்க வில்லை.
சாதாரண, பதற்றமான, மிகவும் பதற்றமான வாக்குச் சாவடிகளின் பட்டியல் நாளை தயாராகிவிடும். இதுவரை பலுசிஸ்தானில் மட்டும் 1,170 வாக்குச் சாவடிகள் மிகவும் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது.
மிகவும் பதற்றமான பகுதிகளில் மட்டுமே ராணுவத்தினர் அனுமதிக்கப்படுவார்கள்" என்றார்.