அமெரிக்காவில் லூசியானா பல்கலைக்கழகத்தில் கடந்த வாரம் சுட்டுக் கொல்லப்பட்ட 2 இந்திய மாணவர்கள் கொலையில் தொடர்புடையவர்களாகக் கருதப்படும் இரு கருப்பின இளைஞர்களின் வரைபடத்தை காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர்.
இந்திய மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட அன்று பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள குடியிருப்பில் இருந்து அவசரமாக வெளியேறிதாகக் கூறப்படும் இவர்களைப் பார்த்தவர்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் இந்த வரைபடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
சூழ்நிலைகளை வைத்துப் பார்க்கையில், கொள்ளையடிக்க வந்த இளைஞர்கள் கொலையில் இறங்கியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேகத்திற்குரிய இளைஞர்களில் ஒருவனுக்கு 20 வயதிருக்கும் என்றும், சுருட்டை முடியை உடையவன் என்றும் காவலர்கள் கூறுகின்றனர். இவன், நிகழ்வன்று வெள்ளை நிறச்சட்டை அணிந்து காரை ஓட்டி வந்துள்ளான்.
மற்றொருவனுக்கு 25 வயதிருக்கும் என்றும், வாட்டசாட்டமான உடலுடன் குட்டையான முடியுடையவன் என்றும் தெரிவித்துள்ளனர். 5 அடி 8 அங்குலம் முதல் 5 அடி 10 அங்குல உயரமுள்ள இவன் நிகழ்வன்று, அடர்த்தியான நிறமுடைய ஜீன்ஸ் பேண்ட்டும் வெள்ளை நிறமுடைய முழுக்கை சட்டையும் அணிந்து வந்துள்ளான்.
இந்த வரைபடங்களை www.Lsu.Edu/pa/photos என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.