இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையில் உள்ள நல்லுறவுகளை கெடுக்க முயலும் அந்நிய சக்திகளை இருநாடுகளும் அனுமதிக்கக் கூடாது என்று ஈரான் அயலுறவு அமைச்சர் மானுசெர் மொட்டகி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து டெஹ்ரானில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "இந்தியாவுடன் எங்களுக்கு உள்ள நல்லுறவுகளை எந்தவொரு நாட்டிற்கும் எதிராகப் பயன்படுத்த நாங்கள் விரும்பவில்லை. அதே நேரத்தில் இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளைச் சீர்குலைக்க முயலும் சில அந்நிய சக்திகளையும் கண்டிப்பாக அனுமதிக்க முடியாது" என்றார்.
மேலும், ஈரானுடன் உள்ள நல்லுறவுகளைக் கைவிடுமாறு சில சர்வதேச நாடுகள் கொடுக்கும் நிர்ப்பந்தத்தை இந்தியா எதிர்க்க வேண்டும் என்றும் மொட்டகி வலியுறுத்தினார்.
கடந்த 28 ஆண்டுகளாக ஈரானில் அமைந்த எல்லா அரசுகளும் இந்தியாவுடன் உள்ள நல்லுறவுகளை மேம்படுத்துவதற்கு ஆதரவாக இருந்தன. இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இருதரப்பு உறவுகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது கவலை அளிக்கிறது. இந்த உறவுகளை மீண்டும் புதுப்பிக்க தீவிர முயற்சி எடுக்க வேண்டும் என்றார் அவர்.
ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறு இந்தியாவை அமெரிக்கா வற்புறுத்தி வரும் நிலையில், ஈரானின் வேண்டுகோள் முக்கியத்துவம் பெறுகிறது.